ஓ.பன்னீர் செல்வம் ஒரு சில ஆட்களை வைத்துக்கொண்டு பதவி நியமனம் செய்வது, ‘ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்கு சமம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்

மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் ஜீவாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சொத்துவரி, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு பொருள்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது. இன்று ஜிஎஸ்டி வரி அதிகமாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த சூழ்நிலையில் கூட ஜிஎஸ்டி விஷயத்தில் எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். கல்விக்கடன் ரத்து, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு, பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் மானியம், முதியோர் உதவித்தொகை என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஆனால், அவர்களின் கட்சித் தலைவருக்கு ஊர் தோறும் சிலை வைக்கிறார்கள். அதற்கு பணம் இருக்கிறது, மக்கள் நலப்பணிகளுக்கு பணம் இல்லையா? திமுக விளம்பர அரசியல், கருணாநிதிக்கு புகழ்பாடுதல் ஆகிய இரண்டு வேலைகளைத் தான் செய்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த திட்டத்துக்கு லேபிள் ஓட்டுகிற வேலையும், பெயிண்ட் மாற்றுகிற வேலையையும்தான் செய்கிறது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? சமூக நீதிக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. ஓபிஎஸ், ஒரு சில பேரை வைத்துக்கொண்டு, நான்தான் கட்சி என்று சொல்வது ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல வேடிக்கையாக இருக்கிறது. மாநிலத்தின் நலன், சிறுபான்னையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதிமுக-வின் நோக்கம்’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal