கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ இதழில், ‘மனக்குமுறலில் மாற்று சமுதாயத்தினர்… என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?’ என்று கவர்ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.
மாற்று சமுதாயத்தினரின் மனக்குமுறலை எடப்பாடி பழனிசாமி போக்கினாரோ… இல்லையோ… ஓ.பன்னீர்செல்வம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணனுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார். அதே போல் நாடார் உள்ளிட்ட பல்வேறு மைனாரிட்டி சமுதயாத்தைச் சேர்ந்தவர்களை மா.செ.வாக அறிவித்து, ‘நான் ஒற்றை சமுதயாத்திற்கானவன் கிடையாது’ என்பதை நிரூபித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கியும், புதிதாக நியமித்தும் வருகிறன்றனர். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், ஆகியோரை நியமித்தும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து ஓ-பிஎஸ் வெளியிடப் போகும் பட்டியல்தான் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் என்கிறார்கள்!
அ.தி.மு.க.வில் முத்தரையர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் கு.ப.கிருஷ்ணனுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியிருப்பது பற்றி அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், எம்.ஜி.ஆர். காலத்து அரசியல் வாதிதான் கு.ப.கிருஷ்ணன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வேளாண்துறை அமைச்சராக ஐந்தாண்டு காலம் பணியாற்றி அம்மாவிடமும் நன்மதிப்பை பெற்றவர் கு.ப.கி. ஆனால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ‘மணி’களின் கைகளில் அ.தி.மு.க. என்ற மாபெறும் இயக்கத்தை ஒப்படைக்க முயற்சித்து வருகிறார். ( அதாவது, அவரது எண்ணவோட்டப்படி தற்போது அ.தி.மு.க அவர்களது வசம்!).
கட்சியின் மிக ஜூனியரான முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிர்ஷ்டத்தால் அமைச்சரானவர். அவரைப் போன்றவர்களுக்கு எடப்பாடி முக்கியத்துவம் கொடுத்து மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டி வருகிறார். கடந்த தேர்தலின் போது, மூத்த நிர்வாகிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது வீட்டு வாசலில் காத்திருக்க வைத்தார். ‘அம்மா இருந்திருந்தால் இப்படி நடக்குமா?’ என்று மூத்த நிர்வாகிகள் ஆதங்கக்குரல் அப்போதே கேட்டது.
ஆனால், ஓ.பி.எஸ். பொறுமையாக காய் நகர்த்தினாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில்தான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கி.க்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் நதிமூலம், ரிஷிமூலத்தை நன்கு அறிந்து வைத்திருப்பவர் கு.ப.கி.! இவரது வியூகம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் கைகொடுக்கும். அடுத்தடுத்து ஓ-பிஎஸ் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும், மாஜிக்கள் மீதுள்ள வழக்கு நடவடிக்கைகளும், ‘மேலிடத்தின்’ அதிரடிகளும் எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவை கொடுக்கும்.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை வழிநடத்தும் பெறுப்பை மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்பார்’’ என்றனர் நம்பிக்கையுடன்!
நம்பிக்கைதானே வாழ்க்கை… பொறுத்திருந்து பார்ப்போம்..!