கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவி விடுதியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி” உள்ளது.

இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சரளாவின் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாணவி விஷ பூச்சி கடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி மரணம் குறித்து அறிந்ததும் அவரது பெற்றோர் பூசனம், முருகம்மாள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி விடுதிக்கு வந்தனர். அவர்கள் மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க பள்ளி விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியில் இருந்து வந்த யாரையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல் விடுதியில் இருந்த மாணவிகளையும் வெளியே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. மாணவி சரளா, விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் ஆவார். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே மாணவி மரணம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதே போல் மாணவி சரளாவின் சொந்த ஊரான தக்களூர் கிராமத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவி இறந்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal