ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் அரங்கேறும் அவலங்களுக்குக் காரணம் ‘அறிவாளி ஆடிட்டிர்’ ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ‘அடக்கமான’ தலைவரைப் பார்த்து ‘ உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று நான் கேட்டேன்’ என்பதை மேடையிலேயே பெருமையாக சொன்னவர்தான் அந்த ஆடிட்டர்!

அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் நடக்கும் அனைத்துக் குழப்பங்களுக்கும், அந்த ‘அறிவாளி’தான் காரணம் என்ற சூழ்நிலையில், ‘தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு சாதகமாக சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக ‘மேலிட’ தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியிருப்பதுதான், அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அகில இந்திய பா.ஜனதா செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி பேசும்போது, ‘‘தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருக்கிறது. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமல்ல அதில் உள்ள ஒவ்வொருவரிடமும் நல்ல நட்புடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். அ.தி.மு.க.வில் இப்போது உள்கட்சி பிரச்சினை உள்ளது. கடந்த 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராகவும் அதிகாரம் மிகுந்த இரண்டாவது தலைவராகவும் இருந்தார்.

தொடர்ந்து அந்த கட்சியை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் எங்கள் நட்பு தொடரும். கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது பா.ஜனதா திராவிடத்தில் அடங்கிய இந்துத்துவா, தேசிய சிந்தனை, தமிழின் பெருமை, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. இதை மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பா.ஜனதா வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் தி.மு.க. பலமடையும். பா.ஜனதாவுக்கு ஆளும் தி.மு.க. அரசை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதாவின் செயல்பாடுகளால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்’’இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பம், பா.ஜ.க.விற்கு சாதமாக அமைந்திருப்பதை அக்கட்சித் தலைவர் ஒருவரே ஓபனாக பேசியிருப்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal