தமிழகம் முழுவதும் மா.செ.க்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களை நியமிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று 14 மா.செ.க்களை நியமித்திருக்கிறார். இன்னும் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருக்கிறார்!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்ட பிறகு உள்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் மற்றும் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் இருவரும் சட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். ஏட்டிக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் தான் கட்சி பொறுப்பை வகித்து வருவதாகவும் கட்சி விதிமுறைகளுக்கு முரணாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது எனவும், ரிசர்வ் வங்கி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். அவர் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் அடையாறில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி 4 நாட்கள் அங்கு தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜே.சி.டி.பிரபாகரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரிடம் மட்டும் தொலைபேசியில் பேசிவிட்டு ஓட்டலில் ஓய்வு எடுத்து வருகிறார். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. 27-ந்தேதி வரை 4 நாட்கள் அங்கு தங்கி இருக்கும் அவர் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். 28-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் ஓட்டலில் இருந்து வீடு திரும்புகிறார். அதுவரையில் புதிய நிர்வாகிகள் குறித்து யார் யாரை தேர்வு செய்து அறிவிப்பது, கட்சியின் பிற அணி நிர்வாகிகள், போன்றவற்றை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டு புதியதாக நியமிக்கிறார். நேற்று சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மீதமுள்ள 55 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை அறிவிக்க ஆலோசித்து வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காய் நகர்த்தவும் திட்டமிட்டு உள்ளார்.

பிரதமரிடம் தனக்குள்ள நல்மதிப்பை தக்க வைத்து கொள்ள பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளுடன் தொடர்பை வலுப்படுத்தி வருகிறார். தனது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மூலமும், தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் வழியாகவும் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார். ஓட்டலில் தங்கியுள்ள ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சாதுர்யமாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். அனைத்து மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதோடு, கட்சியில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் நிர்வாகிகளை கட்சியில் மீண்டும் சேர்த்து பொறுப்புகளை அறிவித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புகளை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்ற நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பகுதி செயலாளர், வட்ட செயலாளர், அதன் நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு விரைவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட சிறிய சறுக்கலை தொடர்ந்து புதிய உத்வேகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட தொடங்கியுள்ளார். மேலும் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களிலும் அதிரடி அறிவிப்புகள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் புதிய வியூகம் வகுத்து வருகிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal