ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் இன்று இரவு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இந்த விருந்தில் பங்கெடுக்கும்படி பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் எஸ்.பி.வேலு மணி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் டெல்லி சென்றார்கள்.

இன்று இரவு டெல்லி அசோகா ஓட்டலில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கிறார். 25-ந்தேதி புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். டெல்லியில் தங்கி இருக்கும் போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதாவின் கூட்டணி கட்சி என்பது மட்டுமல்ல ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த கட்சியில் அவ்வப்போது உருவெடுத்த பிரச்சினைகளை மோடி தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளார். தற்போதைய நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க. வலுவாக இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். பா.ஜனதா வலுவாக இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பக்கபலமாக இருக்கிறது. பா.ஜனதா கொண்டு வரும் திட்டங்களை ஆதரிக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் அ.தி.மு.க. முழு ஆதரவை அளித்தது. எனவே அ.தி.மு.க.வை மிகச்சிறந்த கூட்டாளியாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. அந்த வகையில் ஒற்றுமையுடன் செயல்படவே பா.ஜனதா விரும்புகிறது.

ஆனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்குள் எழுந்த போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் வீழ்த்தப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். கட்சி அலுவலகத்தை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட தகராறில் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு போட்டு அதையும் எடப்பாடி பழனிசாமி மீட்டார்.

ஆனாலும் கோர்ட்டில் வழக்கு, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு முடிந்தவரை நெருக்கடிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் மோடியை இருவரும் சந்தித்து பேசவும் ஆதரவை பெறவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக மோடியை சந்திக்கும் வாய்ப்பு தானாகவே எடப்பாடி பழனிசாமியை தேடி வந்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

டெல்லியில் மோடி, அமித்ஷாவை சந்திக்கும் போது ஓ.பன்னீர்செல்வம் பற்றி நேரடியாகவே புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக இதுவரை ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொண்ட விதம் பற்றி ஒன்று விடாமல் தொகுத்து வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பிறகு ஒற்றை தலைமை இல்லாததால் கட்சி பணிகளில் ஏற்பட்ட பின்னடைவு குறிப்பாக ஆளும் தி.மு. க.வை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் போனது பற்றி தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.

அதற்காகவே ஒற்றை தலைமையை நிர்வாகிகள் விரும்பியது, அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தோடு பலமுறை சமரசம் பேசியும் ஏற்றுக்கொள்ளாதது பற்றியும், சொந்த கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு போட்டது, கட்சியின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பது ஆகியவற்றை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளார். முக்கியமாக கடந்த 11-ந்தேதி வானகரத்தில் பொதுக்குழு நடந்த போது கட்சி அலுவலகத்தில் புகுந்தது. அப்போது அலுவலகத்தை சேதப்படுத்தியது, பல ஆவணங்களை தூக்கி சென்றது ஆகியவற்றை எடுத்து சொல்லவும் அதற்கு ஆதாரமாக ‘சீல்’ அகற்றப்பட்ட பிறகு அலுவலகம் அலங்கோலமாக கிடந்ததை முழுவதும் வீடியோவாக பதிவு செய்து உடன் எடுத்துச்சென்றுள்ளார்.

முக்கியமாக தி.மு.க.வுடன் தொடர்பு வைத்து சொந்த கட்சிக்கு எதிராக செயல்படுவதை விபரமாக தெளிவுபடுத்த முடிவு செய்துள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தது, பிரச்சினை முடியும் வரை போலீஸ் வராமல் போனது, அதன் பிறகு பிரச்சினையை காரணம் காட்டி அரசு சீல் வைத்தது போன்ற விசயங்களை சொல்ல திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் 28-ந்தேதி சென்னையில் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பதையே தடுக்க வியூகம் அமைக்கிறார்.

டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளார். அதாவது பெரும்பான்மை நிர்வாகிகளால் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் கட்சி தொடர்பாக அளிக்கும் புகார்களை நிராகரிக்க வேண்டும் என்று மனு அளிக்க உள்ளார்.

இதுபற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர், ‘‘ தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விபரங்களும் உளவுத்துறை மூலம் மோடிக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதை உறுதிப்படுத்துவது போல் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் அமையும். ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலன்கள் அனைத்தும் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம் மோடியின் ‘குட்புக்கில்’ இருந்து நிச்சயம் வெளியேற்றப்படுவார்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal