அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் நான்கு மாதத்தில் பொதுச்செயலாளர் ஆவது நிச்சயம்! இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் சேரலாம் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது!
தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினரைத் தவிர மாற்ற மாவட்டங்களில் செல்வாக்கை இழந்தவராகக் காணப்படுகிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான் கட்சி அலுவலகம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவை ஓ.பி.எஸ். கையை விட்டுப் போனது! தற்போது ஓ.பி.எஸ்.ஸை விரைவில் சசிகலா சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
தமிழக அரசியல் களத்தில் ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பற்றி மலைக்கோட்டை மாவட்ட மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘‘சார், ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை ஜெயலலிதாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்டாலும், அவர் அந்த பதவிக்குரியவராக தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், தனக்கு எதிராக நடக்கும் சதிவலைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
ஓ.பி.எஸ்.ஸிடன் இடது, வலதாக இருந்த முன்னாள் எம்.பி., மைத்ரேயனும், கே.பி.முனுசாமியுமே அவரைவிட்டு விலகி எடப்பாடியிடம் அடைக்கலம் புகுந்தனர். அந்தளவிற்கு தன்னை நம்பிவந்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை ஓ.பி.எஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது தொகுதியைத் தவிர அடுத்த தொகுதிக்கு ஒரு பைசாக்கூட செலவு செய்யவில்லை. ஏன், ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்யவில்லை!
ஆனால் கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் சமபங்கை கேட்டு வந்தார். எனினும், எடப்பாடியை அதிகளவு எரிச்சல் படுத்தியது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்வுதான். ஜெயக்குமாருக்கு கொடுத்தாக வேண்டும் என்று எடப்பாடி உறுதியாக இருக்க, வீம்புப் பிடியாக இருந்து, தர்மருக்கு வாங்கிக் கொடுத்தார் ஓ.பி.எஸ். (இல்லாவிட்டால் கையெழுத்து போட முடியாது என்று ஓபனாகவே சொல்லிவிட்டாராம்!) இனியும் பொறுத்திருக்க முடியாது என நினைத்த எடப்பாடி அதிரடியில் இறங்க ஆரம்பித்ததுதான், இன்றைக்கு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது!
சசிகலா பக்கம் சென்றாலும் ஓ.பி.எஸ்.ஸுக்கு பெரிய மரியாதை இருக்காது. அங்கே உள்ள குடும்பத்தினரைப் பற்றி எடப்பாடியை விட நன்கு அறிந்து வைத்திருப்பவர் ஓ.பி.எஸ். இனி அ.தி.மு.க.விலும் (எடப்பாடி அணி) ஓ.பி.எஸ்.ஸுக்கு இடமில்லை என்பதில் எடப்பாடி தெள்ளத் தெளிவாக இருக்கிறார். இதனால் பன்னீர் செல்வம் பா.ஜ.க.விற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று நமக்கு அதிர்ச்சி கொடுத்தார்!
மேலும் அந்த நிர்வாகி நம்மிடம், ‘ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே மேலிடத்தில் கேட்காமல் எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டார்கள்! அப்படி இருக்கும் போது, ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்டிய விவகாரத்திலும் ‘மேலிட ஆதரவு’ எடப்பாடி தரப்பிற்கு இருந்திருக்கிறது. அதே சமயம், ஓ.பி.எஸ்.ஸின் மனம் நோகாமல் இருப்பதற்காக, (எடப்பாடி ஆதரவாளர்கள் மீது)வருமான வரித்துறையினர் ரெய்டு சம்பவங்கள் அரங்கேறியிருக்கலாம். ஆதாவது, ஆட்சி மாறி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஏற்கனவே, ரெய்டு நடந்து விட்டது. இனி அங்கே என்ன இருக்கப் போகிறது என்பது ஒரு சாதாரண குழந்தைக்குக் கூடத் தெரியாதா என்ன?
எனவே, ஓ.பி.எஸ். தன்னுடன் இருக்கும் சகாக்களுடன் விரைவில் காவி வேட்டி கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்!
தமிழக அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதுதான் தற்போதை தகவலாக இருக்கிறது!