தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மின்சார வாரியம் மின் நுகர்வோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கு வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரையில் மின் மீட்டர் டெபாசிட் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கும் மாத வாடகையாக ரூ.60 வீதம் இரண்டு மாதத்திற்கு ரூ.120 வசூலிக்க முடிவு செய்துள்ளது.
மிட்டருக்கு வாடகை கட்டணம் வசூலித்தால் கணிசமான வருவாய் மாதந் தோறும் மின்சார வாரியத்திற்கு கூடுதலாக கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வாடகை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின்சார வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு அனுமதி கிடைத்துவிட்டால் செப்டம்பர் மாதத்தில் இருந்து மீட்டருக்கு ரூ.120 (2 மாதத்திற்கு) வாடகை வசூலிக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டருக்கு இந்த வாடகையை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் எதிர்காலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது இந்த வாடகையை ரூ.350 ஆக உயர்த்த திட்டமிட் டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவர், ‘‘மீட்டரை பொதுமக்கள் வாங்கி தரும் பட்சத்தில் வாடகை கட்டணம் செலுத்துவதில் இருந்து தவிர்க்கலாம். மீட்டர் தொடர்பான கட்டணம் வசூலிக்கலாம் என தமிழ் நாடு மின்பகிர்மானம் விதி கூறுகிறது. மேலும் மின் மீட்டர் இடமாற்றம் அல்லது மாற்றம் செய்வதற்கு 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் கூறுகிறது.
தற்போது மீட்டர் போர்டு ‘சிங்கில் பேஸ்’ இடமாற்றம் செய்வதற்கு ரூ.500, 3பேஸ் இணைப்புக்கு ரூ.750-ம் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கிறது. இந்த கட்டணத்தை மேலும் உயர்த்தவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான செலவாக ரூ.1000 மற்றும் ரூ.1500-ம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்த அழுத்த டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் செலவின கட்டணமும் ரூ.1000 முதல் ரூ.2000 வரை கூட வாய்ப்பு உள்ளது. உயர் அழுத்த டிரான்ஸ்பார்மருக்கு ரூ.2000 முதல் ரூ.4000 வரை உயர்த்தவும் பரிசீலிக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சார கட்டணம் அல்லாத வருவாய் 2021-2022-ம் ஆண்டில் ரூ.1,730 கோடியாக இருந்தது. இதனை நடப்பு ஆண்டில் ரூ.1.793.45 கோடியாக அதிகரிக்க (3.7சதவீதம்) திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.