ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது அதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவருக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைமைஅலுவலகத்தையும் சட்டப் போராட்டத்தின் மூலமாக பழனிசாமி கைப்பற்றியுள்ளார்.

இதற்கிடையே கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை பழனிசாமி நியமித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கடந்த 17-ம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஓபிஎஸ் வகித்து வந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்து, அப்பதவியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவுக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அது பரிசீலனையில் இருப்பதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான விவரங்களை மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு பழனிசாமி அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘கட்சியில் இருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டிருப்பதால், மக்களவையில் அவருக்கு அதிமுக எம்.பி. என்ற அங்கீகாரத்தை கொடுக்க வேண்டாம்’ எனவும்அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பரிசீலனையில் உள்ள அந்த கடிதத்தை மக்களவை தலைவர் ஏற்கும் பட்சத்தில், ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை இழந்து, கட்சி சாராத எம்.பி. ஆகிவிடுவார். இதன்மூலம், முக்கிய விவாதங்களின்போது அவருக்கு பேசுவதற்கு முக்கியத்துவமும், போதுமான நேரமும் வழங்கப்படாது என பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal