கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி, அவரது தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 21) தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் மறு பிரேத பரிசோதனை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் குழுவை நியமித்து, மாணவியின் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஜூலை 19ல் மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது. தங்கள் தரப்பு தெரிவிக்கும் மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரி தந்தை ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக எடுத்து விசாரிக்கக் கோரி மாணவியின் தந்தை சார்பில் வழக்குரைஞர் ராகுல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் முறையிட்டார். அப்போது, தலைமை நீதிபதி இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, மறு பிரேத பரிசோதனை குறித்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு உரிய நேரத்தில் தரப்பட்டது என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து ‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் மறு பிரேத பரிசோதனை நடத்த எவ்வித தடையும் விதிக்க முடியாது. மாணவியின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது’ எனக் கூறி தந்தையின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal