அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் தனது வீட்டிலேயே தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய நிர்வாகிகளை நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது. மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள அசோகன், தேனி மாவட்ட செயலாளரான சையதுகான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் எம்.ஜி.சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் மட்டுமே மாவட்ட செயலாளர்களில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சி பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த 6 மாவட்ட செயலாளர்களையும் அதிரடியாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இவர்களின் பதவியை மட்டும் பறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இவர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டார்கள் என்றே தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

உடனடியாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே புதிய இந்த 6 மாவட்ட செயலாளர்கள் பதவியையும் பிடிப்பதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தேனி, திருச்சி, பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் புதிய பதவியை பிடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த 5 மாவட்டங்களிலும் வேகமாக செயலாற்றக்கூடியவர்களையே மாவட்ட செயலாளர்களாக நியமிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை இந்த மாவட்டங்களிலும் குறைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் இன்பதுரை, எடப்பாடி பழனிசாமியை நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் பற்றி இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணி, அரியலூர் மாவட்ட செயலாளரான தாமரை ராஜேந்திரன், முன்னாள் சபாநாயகரான அருணாசலம் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal