‘‘நான் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறேன் பிறகு எதற்காக போட்டியிட வேண்டும் என்றும், அதிமுக அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன்’’ எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளும் இழந்த மாணவி லட்சுமி பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றிபெற்றதை அறிந்த சசிகலா மாணவி லட்சுமிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததுடன், நேரில் வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று மயிலாடுதுறை காப்பகத்திற்கு வந்து மாணவி லட்சுமியை பாராட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சசிகலா, ‘‘அதிமுக பொதுச்செயலாளர் நான் என்று கோர்ட்டில் வழக்கு உள்ளது. நான் ஏற்கனவே பொதுச்செயலாளராக இருக்கிறேன். பிறகு எதற்கு போட்டியிட வேண்டும். அதிமுக அலுவலகத்திற்கு நிச்சயம் நான் செல்வேன். அவர்கள் தான் (பழனிசாமி, பன்னீர்செல்வம்) சண்டை போட்டுகொண்டு இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வளவு வருஷம் ஆண்ட கட்சி ஏழை, எளியோர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்த பொன்விழா ஆண்டில் அலுவலகம் பூட்டப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். எதிர்க்கட்சி என்று சொல்லுபவர்கள் உட்கட்சிக்குள்ளேயே சண்டைபோட்டு கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் எப்படி ஓட்டுபோடுவார்கள். அதனைபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. நான் சுற்றுப்பயணம் செய்வதால் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கட்சி தலைவராக யார் இருக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் விரும்ப வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal