சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. அது தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கடந்த 1 வருடத்தில் மட்டும் 132 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ.1600 கோடியை மானியமாக அளித்துள்ளது.

பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றியுள்ளது.

இந்த பஸ்கள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பஸ்களை பார்த்து அதில் ஏறி செல்லலாம். மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த ‘பிங்க்’ நிற பஸ்கள் அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3,300 பஸ் சேவைகளில் பாதி சாதாரண பஸ் சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal