ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில், அ.தி.மு.க., தன்னிடம் தான் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு கொரியர் மூலம் பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, ‘‘ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் கட்சி தன்னிடம் தான் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்க கூடாது’’ எனக்கூறியுள்ளார்.

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அதிமுக வங்கிக்கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு பழனிசாமி எழுதிய கடிதத்தில், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் தான் கவனிப்பார் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே, பன்னீர்செல்வம் தரப்பில், நேற்றே வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில், பன்னீர்செல்வம் தான் பொருளாளர் எனவும், வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal