கிராமியக் கலைஞர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் சமீபத்தில் நெய்தல் திருவிழாவை தூத்துகுடியில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் உறுப்பினர் எம்.பி.,கனிமொழி கருணாநிதி!

மறைந்த திமுக தலைவர் மு.க.கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006- 2011 ஆட்சி காலத்தில் சென்னை சங்கம் விழா 2007ம் பொங்கல் பண்டியின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஒருவார காலம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் சென்னை சங்கமம் விழா நடைபெற்றது.

சென்னை சங்கமம் விழா சென்னை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதுநாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரமாகவும் அவர்களுக்கான வாய்ப்பாகவும் அமைந்தது. கருணாநிதியின் மகளும் திமுக எம்.பி-.,யுமான கனிமொழியின் சிந்தனையில் உருவானதுதான் சென்னை சங்கம் விழா. கிராமப்புர கலைநிகழ்ச்சிகளை நகர்ப்புற மக்கள் ஆச்சர்யத்துடன் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தினார் கனிமொழி!

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையிலான கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை ‘நெய்தல் கலைவிழா’ என்ற பெயரில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தக் கலைவிழா ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்கி நான்கு நாட்களுக்கு நடந்தது!

பாரம்பரிய உணவுத் திருவிழா, இலங்கை தமிழர்களின் உணவு, 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த கைவினைப் பொருள்கள் விற்பனை கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. நிறைவு நாளில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கலியான் கூத்து, சுபி இசை, கைச்சிலம்பு, களியல் ஆட்டம், பறையாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.

கடைசி நாளில் எதிர்பாராத நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது. அதாவது, கூட்ட நெரிசலில் ஒன்றரை வயது சிறுமி தனது பெற்றோரை பிரிந்து அழுது கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு, தூத்துக்குடி மக்களவை எம்.பி கனிமொழி கருணாநிதியிடம் ஒப்படைத்தனர். அந்த சிறுமியை அன்புடன் அரவணைத்து தனது மடியில் அமர வைத்து கலை நிகழ்ச்சிகளை காண செய்தார். மேலும் ஒலிபெருக்கி மூலம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., ‘‘ ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக எங்களோடு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் கீதாஜீவனுக்கும், மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெய்தல் விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அண்ணன் முதல்வர் தளபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெய்தல் விழா தூத்துக்குடியில் ஏன் நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று கேட்கிறார்கள்.

மண் சார்ந்த கலை வடிவங்கள், மக்களின் கலை வடிவங்கள் நம் வாழ்வின் பொக்கிஷம். இவை நம் வாழ்வை வரித்துக் கொள்கிறது. வேறு கலை வடிவங்கள் மதம் சார்ந்த, இறை சார்ந்தவற்றை பிரதிபலிக்கும் சூழலிலே இந்த நாட்டுப்புற கலை வடிவங்கள்தான் நம் வாழ்வை பிரதிபலிக்கின்றன. புதிதாக நம் நாட்டுக்கு ரயில் வந்தபோது, ஸ்விட்ச் போட்டால் மெஷின் ஓடும் தொழிற்சாலைகள் வந்தபோது இந்த ஒவ்வொரு அனுபவத்தையும் நம்முடைய கிராமிய பாடல்கள்தான் பதிவு செய்தன.

வெள்ளம், வறட்சி, வெளியூர் போய் வேலை செய்ய வேண்டிய நிலை, மீனவர்களின் வாழ்க்கை, நம் வாழ்வின் சின்னச் சின்ன கனவுகள் என அத்தனையும் பதிவு செய்வது மண் சார்ந்த கலைகள்தான்.

இந்த கலைகளில்தான் கேள்விகள் இருக்கின்றன. நம்முடைய சமூகத்தின் மீதான கேள்விகளை முன் வைக்கின்றன கானா பாடல்கள். தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையுடன் பயணிக்கும் மண் சார்ந்த கலை வடிவங்கள், அடுத்த தலைமுறையை நோக்கியும் பயணிக்கின்றன. அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் வந்துகொண்டிருக்கின்றன. நம்முடைய கேள்விகளை, நம் அரசியலை முன் வைக்கும் கலை வடிவங்கள் இவை.

இவற்றை நம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால்தான் தலைவர் கலைஞர் இதை தன் ஆட்சியில் நடத்திட ஊக்கப்படுத்தினார். தளபதி அவர்களும் இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நம் பண்பாட்டில் உணவும் சேர்ந்ததுதான். கலைகளும், உணவும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள். அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று பேசினார் கனிமொழி எம்பி.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal