அ.தி.மு.க.வில் இருந்து விரைவில் ஓ.பி.எஸ். நீக்கப்படுவார் என்று கே.பி.முனுசாமி கூறியிருப்பது, உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது, பன்னீர்செல்வத்தின் துரோகம் குறித்து பேசும்போது, ‘‘உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசுபவர் ஓ.பி.எஸ். அவர் அ.தி.மு.க.விற்கு ஒருபோதும் விசுவாசமாக இருந்ததில்லை. மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் அவரை பலமுறை ‘துரோகி’ என்று கூறியிருக்கிறார். அவரது அருகாமையில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், அவரது உண்மை முகம் எனக்குத் தெரியும். அவரைப் போல் ஒரு துரோகி எனக்குத் தெரிந்து கிடையாது’’ என்றார்.

அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, ‘‘பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்’’என்றார்.

தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், தங்க தமிழ்ச்செல்வனை தேர்தலில் தோற்கடித்தவரே ஓ.பி.எஸ்.தான் என நேரடியாக அம்மா குற்றம் சாட்டினார் என்றதோடு, ஓ.பி.எஸ்.ஸைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal