அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளித்தது. அதில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பளித்து, ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தார்.
வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: ‘‘கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். கட்சியினர் ஆதரவைப் பெற முடியாத மனுதாரர் (பன்னீர்செல்வம்) நீதிமன்றங்கள் வாயிலாக தான் நினைப்பதை சாதிக்கப் பார்க்கிறார்.
ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சி நலன், வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும். பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.
சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது’’ இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.