அதிமுகவினர் மட்டுமின்றி எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் பொதுக்குழு திட்டமிட்டபடி துவங்கியது. இந்த கூட்டத்தில், பழனிசாமி, அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு துவங்கியதும், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலில், செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பொதுக்குழு நடந்தது.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், இந்த கூட்டத்தில் 4 மாதத்திற்குள் பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்காக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக பொதுச்செயலருக்கான அதிகாரங்கள்:
- அதிமுக.,வின் நிர்வாக ரீதியிலான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்.
- தமிழகத்தில் உள்ள அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- துணைப் பொதுச்செயலாளர்களையும், பொருளாளரையும் நியமிக்கும் அதிகாரம்.
- அவைத்தலைவர், பொருளாளர், தலைமை கழக நிர்வாகிகள் கொண்ட செயற்குழுவை பொதுச்செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும்.
- செயற்குழு – பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தலை நடத்துதல், வரவு செலவு கணக்கை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.
- சட்ட விதிகளை மீறும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ பொதுச்செயலருக்கு மட்டுமே அதிகாரம்.
- பொதுக்குழு – செயற்குழு கூடாத நேரங்களில் நிகழ்ச்சிகள், கொள்கை, திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்.
- தேவையை பொறுத்து, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ அதிகாரம்.
- அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவத்தில் கையெழுத்திட அதிகாரம்.
- அதிமுக.,வில் பெண் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்.