இ.பி.எஸ். மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பற்றி எரிகிறது. அதிமுகவை விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இடையே நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் கடந்த ஜூன் 23 ஆம் பொதுக்குழு கூடியது.

இந்தக் கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் செல்லாது எனவும், பொதுக்குழுவுக்கு தடைக் கோரும் வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பினர் மனு அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.