சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையையும் நிருபித்தார்.
முன்னதாக உத்தவ் தாக்கரேயை எளிதில் அணுக முடியவில்லை என ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்தநிலையில் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதில் தாதர் சேனா பவனில் உத்தவ் தாக்கரே தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே,- ‘‘இது சிவசேனாவை அழிக்க பா.ஜ.க. போட்ட சதி. தைரியம் இருந்தால் இடைத்தேர்தலை நடத்துங்கள் என அவர்களுக்கு சவால் விடுகிறேன். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதை விடுத்து, நாம் மக்கள் மன்றத்தை சந்திக்கலாம். ஒருவேளை நாங்கள் தவறு செய்து இருந்தால் மாநில மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். நீங்கள் தவறு செய்து இருந்தால் உங்களை (பா.ஜனதா, ஷிண்டே அணி) வீட்டுக்கு அனுப்புவார்கள். சட்டசபையை இதுபோல நடத்துவது அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல். நான் போராட உள்ளேன். போராட்டத்திற்கு தயாராக உள்ளவர்கள் என்னுடன் இருக்கலாம்’’இவ்வாறு அவர் பேசினார்.