தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்ற நடிகர் வடிவேலுவின் காமெடி போல கேரளாவில் கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரை காணவில்லை என வீட்டு உரிமையாளர் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சேர்ப்பு, வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீசன். இவரது வீட்டின் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை தான் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தார். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை அதில் அமைக்கப்பட்டுள்ள அளவு கருவி மூலம் சதீசன் பார்ப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலையில் சதீசன் கிணற்றின் தண்ணீர் இருப்பை பார்த்தார். அதில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.மறுநாள் காலையில் அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்தது.

கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சதீசன், கிணற்றை சுற்றி, சுற்றி பார்த்தார். கிணற்றின் அடிப்பகுதியில் உடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்குமா? எனவும் பார்த்தார். எதுவுமே இல்லை. எனவே அவர் பக்கத்து வீடுகளில் உள்ள கிணறுகளை பார்த்தார். இங்கிருந்து மாயமான தண்ணீர், அருகில் உள்ள கிணறுகளில் தேங்கி இருக்குமா? எனவும் பார்த்தார். அப்படியும் எதுவும் நடக்கவில்லை.

எனவே அவர் இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதிகாரிகள் சதீசன் வீட்டுக்கு சென்று கிணற்றை பார்வையிட்டனர். ஒரே நாள் இரவில் 18 அடி தண்ணீரும் மாயமாக வாய்ப்பு இல்லை எனக்கூறிய அதிகாரிகள்,இது எப்படி நடந்தது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆய்வுக்கு பின்னரே இதற்கான காரணம் தெரியவரும். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal