ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சசிகலா பேசியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியிருக்கிறது.

ஓ-.பி.எஸ். யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ… அவருக்கு ஆதரவாக சமீபகாலமாக கருத்து தெரிவித்து வந்தது அ.தி.மு.க.வினரை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடியார் தரப்பு, ‘ஓ.பி.எஸ். மாறி மாறி செயல்படுகிறார். ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது கிடையாது’ என்று கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதாலும், கட்சிக்காக செலவு செய்யாமல், தனது சுயநலத்திற்காக மட்டும் சரிபாதி பங்கு கேட்பதுதான் எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், வரும் பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.ஸை நீக்குவது என எடப்பாடி தரப்பு முடிவு செய்திருந்தது.

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்குவது பற்றி சசிகலாவிடம் கேட்டதற்கு?, ‘‘அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது நிச்சயம் செல்வேன். அதிமுகவின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி எல்லாம் சரியாகவே நடக்கும். நிச்சயமாக சொல்கிறேன் ஏதேச்சதிகாரம் என்பது அதிமுகவில் நிச்சயம் கிடையாது. இதுவரை கிடையாது. யாரையும் யாரும் அதிமுகவில் இருந்து நீக்க முடியாது. அதுபோல் செய்ய வேண்டும் என யாரும் நினைத்தாலும் அவர்களுக்கு தொண்டர்களே பதிலடி கொடுப்பார்கள்’’ எனக் கூறியுள்ளார்.

சசிகலாவின் இந்தக் கருத்து, ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஒருசிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சசிகலா ஓ.பி.எஸ்.ஸிற்கு ஆதரவாக பேசியிருப்பது பற்றி மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ்., தனது பதவிக்கு ஆபத்து என்றவுடன் சசிகலாவை எதிர்த்து ‘தர்மயுத்தம்’ தொடங்கினார். பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் எடப்பாடியார் மிகவும் சாதுர்யமாக அதிமுக மாபெரும் இயக்கத்தையும், ஆட்சியையும் வழிநடத்தினார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்த ஓ-.பி.எஸ்.தான், அ.தி.மு.க. தொண்டர்களை வழிநடத்தப் போகிறாரா..?

தற்போது, ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், தனது பதவிக்கு எங்கே பங்கம் வந்துவிடப் போகிறது என்று சசிகலாவின் ஆதரவை நாடியிருக்கிறார். அவரும் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார். அ.தி.மு.க.வில் நடக்கும் இந்த நாடகங்களைப் பார்த்து அடிமட்டத் தொண்டர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்’’ என்றனர்.

சசிகலா & ஓ.பி.எஸ். இடையே மறைமுக உறவு இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal