தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதாவிடம், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பிரேமலதா, ‘‘விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று டாக்டர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது.

அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்’’ இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். அவர் வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு.

தமிழ் கடவுள் முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான். வெற்றி பெற்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்வேன் என திரவுபதி என்னிடம் தெரிவித்தார்’’ என்றார்.

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை என்றும் இருவரில் யார் வெற்றி பெற போகிறார், என்ன முடிவு ஆக போகிறது என்பதை காண காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal