ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தனர். ஆனால், நிறைவேறவில்லை!

அ.தி.மு.க. பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிற 11-ந் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.விலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற வாய்ப்பிருக்கிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது!

அ.தி.மு.க.வில் மொத்தம் உள்ள 2660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கடிதம் வழங்கினார்கள். அதை வைத்துதான் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வர இருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு 11-ந்தேதி கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. தற்போது பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இன்று அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பு கடிதத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு தலைமைக்கழக நிர்வாகிகள் அழைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அழைப்பு கடிதம், தற்போது ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் அனுப்பப்படும் என்கிறார்கள். இதுபற்றி எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்தல் பேசினோம்.

‘‘அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர்.காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி தி.மு.க.வை எதிர்க்கட்சி என்பதை விட எதிரி கட்சியாகவே பாவித்து அரசியல் நடத்தினார்கள். அதனால்தான் தொண்டர்களும் இயக்கத்தில் பிடிப்புடன் இருந்தார்கள். ஆனால் இப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி தொண்டர்களையே கோபப்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. அவர் சசிகலாவை ஆதரித்த போதுகூட தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கருணாநிதியை கலைஞர் என்று குறிப்பிட்டும், தான் அவரது ரசிகர் என்று குறிப்பிட்டும் தெரிவித்த கருத்துக்கள் தொண்டர்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எம்.பி. பதவியில் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் முதல்-அமைச்சரை சந்தித்து பேசியது மட்டுமல்ல தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டியது கட்சியினரிடம் இருந்த கொஞ்சம் நஞ்ச மரியாதையையும் இழக்க செய்தது.

அப்படி இருந்தும் கடந்த முறை பொதுக்குழுக்கூட்டம் கூடுவதற்கு ஒருநாள் முன்பு வரை சமரசம் செய்யப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமை தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகாவது அமைதியாக இருந்திருந்தால் தொண்டர்களும் சகித்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் இறங்கியதால் கொஞ்சம் நஞ்சம் அவரிடம் இருந்த அவரது ஆதரவாளர்களும் அவரை விட்டு விலகி விட்டார்கள். அதனால்தான் இப்போது 2400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய கோரி கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் எழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிடலாம் என்று மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. ஐகோர்ட்டும் தடை செய்ய முடியாது என்று அறிவித்து விட்டது.

கொரோனாவை காரணம் காட்டியாவது கூட்டம் தடை செய்யப்படுமா? என்று நினைத்தார்கள். ஆனால் அதையும் சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்போவதில்லை. கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

அதனால்தான் இந்த பொதுக்குழு, அரங்கத்திற்கு உள்ளே நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வெளியே பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்படுகிறது. பொதுக்குழுவுக்கு வரும் அனைவருக்கும் கிருமிநாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன. வருகிற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதலில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட உள்ளது.

ஏனெனில் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய போது பொதுச்செயலாளரை கட்சியின் உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதியை உருவாக்கி வைத்துள்ளார். அந்த விதி இதுவரை திருத்தப்படவில்லை. எனவே தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்து விட்டு உறுப்பினர்கள் மூலம் தேர்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவார்.

அதுமட்டுமல்ல கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இதுவும் அ.தி.மு.க.வின் விதிகளில் உள்ளது. ஆனால் தற்போது ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக அதை உடனடியாக செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் சாதகமான தீர்ப்பு பொதுக்குழுவுக்கு முன்பு வந்துவிட்டால் விதிகளை திருத்தும் தீர்மானம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மன நிலையை புரிந்து கொண்டு சமாதானமாக போனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கும் ஆபத்து வராது. இல்லாவிட்டால் பொருளாளர் பதவியையும் பறிக்கும் தீர்மானம் கூட கொண்டு வரப்படலாம்.

அதுமட்டுமல்ல அ.தி.மு.க.வில் கட்சிக்கு விரோதமாக யாரேனும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கலாம் என்பது கட்சி விதி. இந்த விதிப்படியும் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வெளியில் போக செய்ய முடியும். இதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

கடந்த முறை கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களில் சில தீர்மானங்களை நீக்குவது மற்றும் சில தீர்மானங்களில் மாற்றம் கொண்டு வருவது, புதிய தீர்மானங்களை சேர்ப்பது பற்றி பொன்னையன் தலைமையிலான தீர்மானக்குழு அடுத்த ஓரிரு தினங்களில் விவாதித்து முடிவு செய்யும். கண்டிப்பாக தி.மு.க. அரசின் சீர்கேடுகளை பற்றி ஒரு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். அதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் அறிவிப்பும் தீர்மானத்தில் இடம்பெற வாய்ப்பு உண்டு’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal