‘இப்படியும் ஒரு மோசடி செய்யலாமா?’ எனும் வியக்கும் அளவிற்கு மோசடி நடப்பதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இணையதளம் மூலம் போலியான தகவல்களை அனுப்பி மோசடி செய்யும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என செல்போனில் குறுஞ்செய்தியை அனுப்பி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘- சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

அதன்படி பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்பட வில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து எஸ்.எம்.எஸ்.ஆக அனுப்புவர். இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவர்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பர்.

எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்தில் இருந்து இது போன்ற மெசேஜ்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே கவனமுடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று அரசு அதிகாரிகள் பெயரிலும் மோசடி நடைபெறுவதாக கூறி கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, ‘‘அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ள நபர்கள் ஆகியோரின் படங்களை வாட்ஸ்அப்பில் வைத்து அதிகாரிகள் மற்றும் பணிபுரியும் அலுவலர்களை தொடர்பு கொண்டு அமேசான் கிப்ட் கார்டுகளை வாங்கி அனுப்புமாறு கூறுதல் மற்றும் பணம் அனுப்ப கூறுதல் போன்ற குற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகிறது.

எனவே பொதுமக்கள் எவரும் தங்களுக்கு தெரிந்த அதிகாரியின் புகைப்படத்துடன் தெரியாத மொபைல் எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களையோ, மெயில்களையோ அல்லது பேஸ்புக் மெசெஞ்சர் மெசேஜ்களையோ நம்பி பணமோ அல்லது கிப்ட் கார்டுகளோ அனுப்ப வேண்டாம்’’இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal