அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான மோதல் வெடித்துள்ள நிலையில், வருகின்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். வசமுள்ள பொருளாளர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு சில நிர்வாகிகளே இருக்கின்றனர்.
அதே போல், ஓ.பி.எஸ். ஆதரவாக இருக்கும் ஒரு சில மா.செ.க்களின் பதவியும் பறிபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். இவரது இடத்திற்கு ஆவின் கார்த்திகேயனை நியமிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி மாலைக்கோட்டை மாவட்ட ர.ர.க்களிடம் பேசினோம்.
‘‘சார், கடந்த மாநகராட்சித் தேர்தலின் போது திருச்சியில் அ.தி.மு.க. வெற்றியே பெறாது என்றனர். அந்தளவிற்கு கே.என்.நேரு தீவிர களப்பணியாற்றினார். ஆனால், அதையெல்லாம் மீறி, தி.மு.க.வினருக்கு கடும் போட்டியை கொடுத்து, தனது தம்பியை வெற்றி பெற வைத்தார் ஆவின் கார்த்திகேயன்.
இந்த நிலையில்தான் தற்போது, ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இடையே மோதல் வெடித்து, அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வாகைசூட இருக்கிறது. இவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் கார்த்திகேயன். அ.தி.மு.க. ஆட்சியின் போது, அமைச்சர்கள் எல்லாம் ஆவின் கார்த்திகேயன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டை வைத்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது, திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். இவர் ஓ.பி.எஸ். பக்கம் இருப்பதால், மா.செ. பதவியிலிருந்து வெல்லமண்டியை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ஆவின் கார்த்திக்கேயனை நியமிக்க எடப்பாடியார் தரப்பு முடிவு செய்திருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், சமீபத்தில் புதிதாக அ.தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்து, தினந்தோறும் தொண்டர்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் ஆவின் கார்த்திகேயன். வருகிற பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, திருச்சி மாநகர மா.செ.வாக ஆவின் கார்த்திகேயன் நியமிக்கப்படுவார்’’ என்று அடித்துக் கூறினார்கள்!
திருச்சி அ.தி.மு.க. மாநகர மா.செ.வாக ஆவின் கார்த்திகேயன் வந்துவிடக் கூடாது என்பதில் எதிர்கோஷ்டி உறுதியாக இருக்கிறது. இதனால், இப்போதே உள்குத்து வேலைகளில் சிலர் இறங்கியிருக்கிறார்களாம்!