தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 125 பேர்தான். தி.மு.க.விற்கு ஏழு எம்.எல்.ஏ.க்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சியைத் தவிர்த்து!
இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் நடந்த ‘ஆபரேஷன்’ தமிழகத்தில் நடக்கும் என புதிய குண்டைப் போட்டிருக்கிறார் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனாவின் எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி தூக்கினர். இதனால் மகாராஷ்டிராவின் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக அதிருப்தி சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவியேற்றார். பாஜக தொடர்ந்து பின்பற்றும் இந்த கட்சி உடைப்பு, ஆட்சி கவிழ்ப்பு பார்முலா அடுத்து எந்த மாநிலத்தில் அரங்கேறும் என்பது விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் அதன்பின்னர் செய்தியாளர்களிடமும் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவரான காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசும்போது,
‘‘இந்துக்களின் உரிமை தமிழகத்தில் மீட்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாடு அரசு இந்துக்களின் உரிமையை வழங்கவில்லை.
தமிழக அரசு அடுத்த 4 ஆண்டுகள் நீடிக்குமா? 3 ஆண்டுகள் தொடருமா? என்றெல்லாம் சொல்லவும் முடியாது. மகாராஷ்டிராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமது பதவியை ராஜினாமா செய்வார். தமிழகத்தில் ஆளும் திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் உளவுத்துறைதான் சொல்கிறது.
தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பெண்கள் கூழ் காய்ச்சி வழங்குவர். அதனால் அம்மன் கோவில்களுக்கு விலையில்லா அரிசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை கொன்டாடும் இந்துக்களுக்கு தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை- இந்துக்களின் உரிமையை வலியுறுத்திதான் நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் இந்துக்களின் உரிமை மீட்புக்கான பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், ‘மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என தி.மு.க. தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது!