அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக பன்னீர்செல்வத்தின் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர்கள் 23 தீர்மானங்களையும் நிராகரித்துள்ளதாக சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அறிவித்தனர். மேலும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ல் நடைபெறும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்ட நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பாகும். ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal