அ.தி.மு.க.வில் தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள ஓ.பி.எஸ். போராடி வருகிறார். அவருக்கு ‘மேலிட’ ஆதரவு இருப்பதாக தற்போது தகவல்கள் கசிகின்றன!

டெல்லி மேலிடத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்தான் நெருக்கத்தில் இருக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ்.ஸிற்கு மட்டும் ஆதரவு ஏன் என்று ‘மேலிட’ வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி அரசுக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வதற்கு வாக்களித்தவர்தான் ஓ.பி.எஸ்.! ஆனால், எடப்பாடி பழனிசாமி மிகவும் சாதுர்யாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அதன் பிறகு வேறு வழியில்லாம் பசையான துறையை எடப்பாடியிடம் பெற்றுக்கொண்டு, ‘கைகுலுக்கிக்’ கொண்டார் ஓ.பி.எஸ்.

அதே போல், கடந்த 23&ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறக்கூடாது. புதிதாக தீர்மாணங்கள் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றப் படியேறினார் ஓ.பி.எஸ். முதலில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பொதுக்குழுவை நடத்தவும், புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் தடையில்லை என்றார். இரவோடு இரவாக இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் ஓ-.பி.எஸ்.ஸுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

அதாவது, கல்யாணமே நடக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டுவிட்டு, அந்தக் கல்யாணத்திற்கு போனால் மரியாதை கிடைக்குமா? அது போலத்தான் பெதுக்குழுவிற்கு தடைகேட்டுவிட்டு பொதுக்குழுவிற்கு சென்ற ஓ.பி.எஸ்.ஸிற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் முகத்தில் கரியைப் பூசினார்கள்.

இந்த நிலையில்தான் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழுவை நடத்துவது, ஓ-.பி.எஸ்.ஸை பொருளாளர் பதவியில் இருந்து எடுப்பது, ஓ.பி.எஸ். தொடுக்கும் வழக்கை எதிர்கொள்வது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் தேனியில் இருந்த ஓ.பி.எஸ்.ஸிற்கு ‘மேலிடத்தில்’ இருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். சென்னை வந்த உடனே ஓபிஎஸ் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். ஒரு பக்கம் நிர்வாகிகளை சந்தித்தவர், முக்கியமான 2 பெறிய மூவ்களை செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இவர் கேவியட் மனு தாக்கல் செய்து இருக்கிறார். கடந்த முறை அதிமுக பொதுக்குழுவை நடத்தவும், அதில் ஒற்றை தலைமை தீர்மானம் வர கூடாது, அப்படியே வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் முன் வரைவு தீர்மானம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இந்த ஒற்றை தலைமையின் தீர்மானம் ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். அதோடு பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இதனால் கண்டிப்பாக இந்த அனுமதிகளை கேட்டு எடப்பாடி தரப்பு எப்படியும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும். அப்போது தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் அர்த்தம் கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு சட்ட போராட்டம் நடக்க போகிறது என்பதாகும். அப்படி நடக்கும் பட்சத்தில், ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு சிக்கல் ஏற்படும். அதற்கு இடைக்கால தடை கூட விதிக்கப்படும். ஓபிஎஸ்ஸின் கேவியட் மனு தாக்கல் அதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அடுத்து, அதிமுக பொதுக்குழு, தலைமைக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேறு யாருக்கும் அனுமதி இல்லை. எனக்கு 5 ஆண்டுகள் பதவி உள்ளது. அதனால் தலைமை கழக செயலாளர் எடப்பாடி தலைமை கழக கூட்டத்தை என் அனுமதி இன்றி கூட்ட முடியாது. கட்சி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கான மிக உயர்ந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. எனவே நேற்று தலைமை கழக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இப்படி மிகவும் தெள்ளத் தெளிவாக ஓ.பி.எஸ். எடுத்த மூவ்களுக்குப் பின்னால் ‘மேலிடம்’ இருக்கிறது என்கிறார்கள். மேலும் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள், ‘அம்மா அ.தி.மு.க.வை எப்படி கம்பீரமாக நடத்தி வந்தார்கள். ஆனால், ஓ.பி.எஸ். ‘மேலிடத்தின்’ ஆலோசனைப் படி செயல்படுவதுதான் வேதனை அளிக்கிறது’’ என்றனர்.

இந்த நிலையில்தான் வருகிற 11&ந்தேதி பொதுக்குழு நடைபெறுமா என்றதே கேள்விக்குறியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal