காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்து வரும் 71 வயதான பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக, டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் மிரட்டப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாதவன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாதவன், அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையிலும், தனது இமேஜை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal