‘என்னை மூன்றாம் கலைஞர் என்று அழைப்பதில் துளிகூட மகிழ்ச்சி இல்லை; என்னை ‘சின்னவர்’ என்றே அழையுங்கள்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்!

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பல அமைச்சர்கள் அவ்வபோது வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், ஸ்டாலினுக்கு பிறகு கட்சி தலைமைக்கு உதயநிதி தான் வருவார் என்று இப்போது இருந்தே திமுக.,வினர் அவருக்கு ‘ஐஸ்’ வைத்து வருகின்றனர். உதயநிதிக்கு பல புகழ்ச்சி பட்டங்களை அளித்தும் கட்சியினர் அழைத்து வந்தனர். இந்த நிலையில், புதுக்கோட்டையில் திமுக சார்பில் நடந்த விழாவில் உதயநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்தார்கள்.

இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சியாக தி.மு.க உள்ளது. என்னைப் பாராட்டிப் பேசுகின்றவர்கள் என் மீது அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும்போது, மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் இப்படியெல்லாம் அழைக்கின்றீர்கள். அப்படி அழைப்பதில் எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது.

கலைஞர் என்றால் அது ஒரே ஒருவர்தான். இரண்டாம் கலைஞர், மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் என்று தயவு செய்து யாரையும் அழைக்காதீர்கள். சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஏனென்றால், இங்கே இருக்கின்ற பெரியவர்களோடு ஒப்பீடு செய்து பார்க்கும்போது, அவர்களுடைய உழைப்பில் நான் மிகமிகச் சின்னவன். அதனால், என்னை சின்னவர் என்றே கூப்பிடுங்கள்’’இவ்வாறு அவர் பேசினார்.

இனிமேல் தன்னை சின்னவர் என்று உடன்பிறப்புகள் அழைக்க வேண்டும் என்பதையே மறைமுகமாக உதயநிதி குறிப்பிடுவதாக உடன்பிறப்புகள் சிலர் கூறினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal