‘‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளமாக இருப்பதாகவும், துரோகம் அவரின் உடன்பிறந்த ஒன்று’’ எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்ட சூழலில், கட்சியை வழிநடத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமியை பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, இக்கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர். 5 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். 4 பேர் பங்கேற்கவில்லை. வரும் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை வெளியில் சொல்ல முடியாது. ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக நீடிப்பாரா என்பது ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் தெரியவரும். பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பவர் ஓபிஎஸ். துரோகம் என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்று. அவரது மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக கூறுகிறார். இதனை எந்தவொரு அதிமுக தொண்டனும் விரும்ப மாட்டான்’’இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது வளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த ஓபிஎஸ் படத்தை தொண்டர் ஒருவர் கிழித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‛அந்த இடத்தில் உடனடியாக ஓபிஎஸ் படத்துடன் கூடிய புதிய பேனர் வைக்கப்படும். படத்தை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal