அ.தி.மு.க. தலைமை அலுவலகம் காலை பத்து மணிக்கெல்லாம் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில், திருச்சியில் முன்னாள் எம்.பி. பா.குமார், ஓ.பி.எஸ். மீது அதிரடி சரவெடியாக பாய்ந்திருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் எம்.பி., பா.குமார், ‘‘கடந்த ஆறு ஆண்டு காலம் எத்தனையோ இடையூறுகளைக் கடந்து, அ.தி.மு.க. எனும் மாபெறும் இயக்கத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்திச் சென்றவர் எடப்பாடியார். ஆட்சிக்கு எந்தவொரு ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் இரட்டைத் தலைமையை தொடர்ந்தோம். ‘எனக்குப் பிறகும் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்’ என சொன்னார் அம்மா. யாரை எதிர்த்து அம்மா அரசியல் செய்தாரோ, அவர்களை ஓ-.பி.எஸ். துதிபாடுவதுதான் உண்மையான தொண்டர்களை வேதனையடைய வைத்திருக்கிறது.

சமீபத்தில் சட்டசபையில் பேசிய ஓ.பி.எஸ்., ‘கலைஞரின் ரசிகன் எனது தந்தை. நான் பராசக்தியின் வசனத்தை மறைத்து வைத்து மனப்பாடம் செய்வேன்’ என்றார். அவரது மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ‘சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்’ என்று சர்டிபிஃகேட் கொடுக்கிறார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தி.மு.க. எனும் தீயை சக்தியை அகற்ற வேண்டும் எனும் நோக்கில்தான் அரசியல் பயணத்தை தொடர்ந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் அம்மாவின் நோக்கம். ஆனால், அம்மாவின் நோக்கத்தையே சீரழித்துவிட்டார் ஓ.பி.எஸ். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தை ஓ.பி.எஸ். தி.மு.க.விடம் அடகு வைத்துவிடுவார்!

அம்மா யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அவரை ஆதரித்து ஓ.பி.எஸ்.ஸும், அவரது மகனும் பேசியதுதான் அ.தி.மு.க. தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. இன்றைக்கு அ.தி.மு.க.வில் 95 சதவீதத்திற்கும் மேல் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் உள்ளனர். அதனை நடந்து முடிந்த பொதுக்குழுவில் நீங்களே பார்த்திருப்பீர்கள். எடப்பாடியார் அ.தி.-மு.க.வை சிறப்பாக வழிநடத்திச் சொல்வதோடு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பது உறுதி. இதற்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதனை தவிடுபொடியாக்குவார் எடப்பாடியார்’’ என்றவர், ‘ஓ.பி.எஸ். எங்கு சென்றாலும் ஜெயிக்க முடியாது’’ என்றார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal