பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்தது.

கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘இந்தியாவில் அசையா சொத்துக்களில் 2 சதவீதம் மட்டும் தான் பெண்கள் பெயரில் உள்ளது. எனவே மத்திய அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களின் பெயரில் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை பிரதமர் மோடி சாதனை நாடாக மாற்றி உள்ளார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்டி மோடியாக ஆசைப்படுகிறார். அதற்கு பிரதமர் மோடியை போல் அவர் உழைக்க வேண்டும். பா.ஜனதா அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து வருகிறது.

பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இதனால் வெற்றிமேல் வெற்றி கிடைத்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக பழங்குடி இன வகுப்பை சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார். பா.ஜனதாவின் சிறப்பான சமூக நீதி கொள்கைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும். சமூக நீதி பற்றி பேசும் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் பா.ஜனதா நிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்காமல் இருப்பது ஏன்? நீட், மேகதாது விவகாரங்களில் அரசியல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிந்துவிட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்கள் பா.ஜனதாவுக்கு கிடைப்பது உறுதி. இதுவே நமது இலக்கு. தமிழகத்தில் நிச்சயம் பா.ஜனதா ஆட்சி ஏற்படும்’’ இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி எல்.முருகன் பேசும்போது, ‘‘- மதுரவாயல்-துறைமுகம் சாலை திட்டம், அரசியல் காரணங்களுக்காக கைவிடப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு மக்களுக்கு பயனளிக்கும் பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை கொண்டு சீர்மிகு சென்னை திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போது சென்னையை சிங்கப்பூராக மாற்றப்போகிறோம் என்றார்.

ஆனால் இன்றைக்கும் சென்னை கூவமாகத்தான் இருக்கிறது. பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை, கல்வி, நகை, சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் சிறிய குற்றம் கூட கூற முடியாத ஆட்சியை பிரதமர் மோடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்’’இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal