‘‘துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் வந்து ஓராண்டு ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் வாயிலாக, பத்திரப்பதிவு ஐ.ஜி., தூங்குவதாக தெரிகிறது’’என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. குமாரபாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, ரியல் எஸ்டேட் தரகர்கள் அபகரித்துள்ளனர் என்று புகார் அளித்தார். மேலும், சார் பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட பதிவாளர் சுரேஷ்குமார் ஆகியோரின் துணையுடன் தரகர்கள் செயல்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு, புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால், வழக்குப் பதிவு செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், ‘‘முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் குறைப்புக்காக, நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டியிருப்பதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையால், அரசுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இழப்பு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், பத்திரப்பதிவு ஐ.ஜி.,க்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பரிந்துரை அனுப்பப்பட்டது, ஆவணங்கள் வாயிலாக தெரிகிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசிடம் விளக்கம் கேட்டு, அறிக்கை அளிக்க அவகாசம் கோரினார்.
ஓராண்டாக, இந்த விஷயத்தில் பத்திரப்பதிவு ஐ.ஜி., தூங்கி கொண்டிருப்பதாக தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு எதிரான, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களில், இதுபோன்று செயல்படுவது கண்டனத்துக்குரியது’’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், விசாரணையை, ஜூலை 7க்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.