அ.தி.மு.க. விவகாரத்தில் பி.ஜே.பி. ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது-…’ என்பது சிறு குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும். ஆனால், அ.தி.மு.க. விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ‘அட்வைஸ்’ வழங்கி வருவதுதான் பி.ஜே.பி.யை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு, தி.மு.க.வையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் ஒருவர் வெற்றியடைய வேண்டுமென்றால், வல்லவனாகவும், சூட்சமம், சூழ்ச்சிகள் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும். இது கலைஞருக்கு உண்டு… அதற்கடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனைத்துத் தகுதிகளும் உண்டு.

ஏனென்றால், அ.தி.மு.க. ஆட்சி ஓரிரு மாதங்களில் கலைந்துவிடும் என்று எல்லோரும் சொல்லிவந்த நிலையில், நான்கரை ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தினார். அதாவது ஒரு பக்கம் பி.ஜே.பி.யின் ரெய்டு, மறுமக்கம் பன்னீரின் குடைச்சல், இன்னொரு பக்கம் டி.டி.வி., சசிகலாவின் மாஸ்டர் பிளான் என அனைத்தையும் சமாளித்து, (இவர்களை சமாளிக்கவே இரண்டுவருடம் ஆகிவிட்டது) கடைசி இரு வருடத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தார் இ.பி.எஸ்.! பத்துவருடம் ஆட்சிபுரிந்த அ.தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக அமைந்ததுதான் எடப்பாடியாரின் பிளஸ்!

அன்றைக்கு என்ன நடந்ததோ, அதே தான் இன்றும் நடக்கிறது. இன்றைக்கு அ.தி.மு.க. என்ற மாபெறும் இயக்கத்தில் இருக்கும் 90 சதவீதம் பேர் எடப்பாடியார் பக்கம் இருக்கிறார்கள். பத்து சதவீதம் பேர்தான் பன்னீர் பக்கம் இருக்கிறார்கள். இந்த பத்து சதவீதப் பேருடன், ‘மேலிட’ உதவியுடன் எடப்பாடியாருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் ஓ.பி.எஸ். இப்படி குடைச்சல் கொடுத்து வருவதை காங்கிரஸ் கட்சி ரசிக்கவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படவேண்டும் என காங்கிரஸ் நினைப்பதுதான் பி.ஜே.பி.க்கு அதிர்ச்சியையும், தி.மு.க.விற்கு வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரியானது. எதிர்க்கட்சி வலுவாக இருப்பது அவசியம். அது மத்தியில் என்றாலும் சரி. மாநிலத்தில் என்றாலும் சரி. அதிமுகவில் யார் இருக்க வேண்டும் என்பதை அக்கட்சி தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கட்சி ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டால் வலுவாக இருக்கும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமையை எடப்பாடி கேட்கும் நிலையில். திருநாவுக்கரசு ஒற்றை தலைமையை வரவேற்று உள்ளார்.

அதே போல், கார்த்தி சிதம்பரம் எம்பி பேசுகையில், ‘‘அதிமுகவில் தொண்டர்கள் எடப்பாடி பக்கம் நிற்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவரை ஒன்றும் செய்து விட முடியாது. எடப்பாடி பக்கம் ஆதரவாளர்கள் இருப்பதால் கோர்ட் வழக்கு எதுவும் செய்துவிடாது. அதனால் அவர்தான் ஒற்றை தலைமைக்கு தகுதியானவர் என்று நிரூபணம் ஆகி உள்ளது. அக்கட்சி ஒற்றை தலைமையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது’’என்று குறிப்பிட்டார்.

இப்படி காங்கிரஸ் கட்சியினர் அ.தி.மு.க. மீது திடீர் அக்கறை காட்டும் ரகசியம் என்னவென்று விசாரித்தோம்.

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க.விற்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்தவர் தற்போது, காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மூலம்தான் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.அதிமுகவில் பொதுக்குழுவில் மோதல்கள் நடந்த நிலையில்.. அன்று மாலையே எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் ராகுல் காந்தி போன் செய்ததாக கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள் என்று எடப்பாடியிடம் ராகுல் கேட்டு இருக்கிறார். அதிகாரபூர்வமாக நீங்கள் இப்போது பாஜக கூட்டணியில் இல்லை. அதனால் எதிர்க்கட்சி வேட்பளாரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். யஷ்வந்த் சின்காவை நீங்கள் ஆதரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறாராம் ராகுல் காந்தி. இந்த போன் காலில் ஒற்றை தலைமை பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்பே தற்போது காங்கிரஸ் நிர்வாகிகளும் ஒற்றை தலைமைக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளனர்’’ என்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதன்மூலம், பி.ஜே.பி.க்கும், தி.மு.க.விற்கும் செக் வைத்திருக்கிறார். ‘மேலிடம்’ ஓ.பி.எஸ்.ஸிற்கு மறைமுக ஆதரவு கொடுத்தால், எடப்பாடியும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள்… பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal