ஜூலை 11ல் திட்டமிட்டபடி, அ.தி.மு.க., பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அ.தி.மு.க., சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக பதில் கூறியிருக்கிறார். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டரும் உயர் பதவி அடையலாம். ஜூலை 11ல் பொதுக்குழுவில் பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக பதவி ஏற்பார்.

ஊரோடு ஒத்து வாழ பன்னீர்செல்வம் முடிவெடுக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் கட்சி வருவதை ஆதரிக்க வேண்டும். அவர் மீது ஒட்டு மொத்த தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திற்கு எதிரான முழக்கத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. பன்னீர்செல்வத்திற்கு மன உளைச்சல் இல்லை. அவரால் தான் தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர் மீது தண்ணீர் பாட்டீல் விசப்பட்டதை பழனிசாமி கண்டித்து, அமைதிப்படுத்தினார்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.,வின் தலையீடு இல்லை. தலையிடவில்லை. ஒரே வேளை தலையிட்டாலும் அதை அனுமதிக்க மாட்டோம். ஸ்டாலின் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. அ.தி.மு.க.,வை அழிக்க இனியும் ஒருவன் பிறக்க மாட்டான். அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என அழகிரியை மனதில் வைத்து தான் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்’’இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal