‘‘தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னேறுவதற்கு கல்வியறிவு தான் காரணம்’’ என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

‘‘கல்லூரி கனவு நிகழ்ச்சியை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் தான் மாநிலத்தின் சொத்துக்கள். அவர்களை முன்னேற்றுவது தான் எங்களின் கடமை. கல்லூரி காலத்தை மாணவர்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். சமூகத்தை முன்னேற்ற என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ சிவன் தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி அரசு பள்ளியில் படித்தவர்கள். தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்தவர் காமராஜர். கல்லூரிகளை திறந்தவர் கருணாநிதி.

மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற கல்வியறிவு தான் காரணம். தமிழகத்திற்கு இணையான கல்வி கொள்கை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. கல்லூரி படிப்புகளை கவனமாக தேர்வு செய்வது போல், கவனம் சிதறாமல் படிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பொறியியல், மருத்துவம் போன்ற கனவுகளோடு நின்றுவிட வேண்டாம். பொறியியல், மருத்துவ துறையை தவிர வாய்ப்புள்ள நிறைய துறைகள் உள்ளன. உழைத்து முன்னேறும் வாய்ப்புகள் அதிகம்.

பல திறன்களை கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதே அரசின் லட்சியம். தமிழகத்தின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகம்.உயர்கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதனை தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது’’ இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal