ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும், அரசியலில் தன்னை அனைவரும் வரவேற்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு யாருமே சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் அவரை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று ஒரு கட்டத்தில் அறிவித்தார். என்றாலும், அவரது அந்த அறிவிப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக எத்தனையோ வழிகளை கையாண்டார். தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டார்.

ஆனால், எந்தவித பிரயோஜனமும் இல்லை. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ். இடையே மோதல் அப்பட்டமாக வெடித்தது. இந்த நிலையில்தான் சசிகலா அடுத்த முயற்சியை கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி ஜூன் 26-ம் தேதி (நாளை) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன். பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி. கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணா குப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொது மக்களை சந்திக்கிறேன்.

ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு அம்மையார் குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு தியாகராயநகர் இல்லம் வந்தடைகிறேன்’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா நாளை சென்னையில் இருந்து திருத்தணி வரை சென்று விட்டு திரும்ப இருப்பது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்யும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி அவரது சுற்றுப்பயணத்தின் ஒத்திகை பயணமாகவும் நாளைய சசிகலாவின் பயணம் பார்க்கப்படுகிறது. ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு சசிகலா எந்த முயற்சி தொடங்கினாலும் முதலில் நல்ல நேரம், நல்ல இடம் பார்த்துதான் தொடங்குவார். அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி முருகன் காலடியில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்கவுள்ளார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும் வகையில் சசிகலா தனது திட்டத்தை வகுத்துள்ளார். மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் பெருமையை உணர்த்தும் வகையில் பேசவும் சசிகலா முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர முயற்சி செய்யும் நிலையில் அந்த பதவியில் தான் இருப்பதாக மக்களின் மத்தியில் பேசவும் சசிகலா திட்டமிட்டு இருக்கிறார். அ.திமு.க.வை தன்னால் மட்டுமே புத்துணர்ச்சி செய்ய முடியும் என்று பிரசாரம் செய்யவும் தீர்மானித்து இருக்கிறார்.

அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டால் அடுத்து அரசியல் பக்கமே வர முடியாது என்பது சசிகலாவுக்கு நன்கு தெரியும். எனவேதான் அவர் புதுமையாக பேசி அ.தி.மு.க.வினரை கவர நினைக்கிறார். அவரது முயற்சி தீபாவளி பட்டாசாக வெடிக்குமா? அல்லது புஸ்வானமாகுமா? என்பது நாளை இரவு தெரிந்துவிடும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal