வருகிற ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இப்பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டார். இதற்கிடையே ஓபிஎஸ்சை தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க, நிர்வாகிகள் சந்தித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பங்கேற்க வரும்படி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை சந்தித்து, பா.ஜ.க, நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதையேற்று, பன்னீர்செல்வம் நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர்.

இந்த நிலையில் டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டியதற்கு எதிராக அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ‘‘கட்சி விதியில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக பொதுச்செயலர் பதவியை கொண்டு முயற்சிப்பதாகவும், தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது’’ என அறிவிக்க வலியுறுத்தியும் அவர் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ஓபிஎஸ் தரப்பு முகாமிட்டுள்ள நிலையில், ஜூலை 11ல் நடக்கவுள்ள பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal