அ.தி.மு.க.வின் பொதுக்குழு களேபரத்தை முறுக்கு மற்றும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டே ரசித்துப் பார்த்திருக்கிறார் சசிகலா! ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டம்தான் சசிகலாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில்தான், மிகவிரைவில் ஓ.பி.எஸ். ஆதரவுடன் சசிகலா அ.தி.மு.க.விற்கு வருவார் என்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸிற்கு நெருக்கமானவர்கள்! ஏனென்றால், எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து ஓ.பி.எஸ்.ஸால் அரசியல் செய்ய முடியவில்லை.

‘மேலிடமே’ சசிகலாவை விரும்பாத நிலையில், ஓ.பி.எஸ். எப்படி அவரை அ.தி.மு.க.விற்கு அழைப்பார் என்பது பற்றி பல்வேறு விஷயங்களை ஓ.பி.எஸ்.ஸின் மனநிலையை நன்கு அறிந்த சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அ.தி.மு.க.வில் இப்போதை அதிகாரச் சண்டை நடந்து வருகிறது. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று 90 சதவீதம் பேர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதனால் ஓ.பி.எஸ்.ஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போதைக்கு ஓ-.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு…. ‘ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவிதான். அ.தி.மு.க.வில் எந்த முடிவு எடுக்கவேண்டுமானாலும், ஓருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் எடுக்கவேண்டும். இதைத்தான் இப்போதைக்கு தனக்கு சாதகமாக ஓ.பி.எஸ். பயன்படுத்தி வருகிறார்.

சசிகலாவை விட எடப்பாடியார் மிகவும் சாதுர்யமாக செயல்படுவது, ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் வாழ்க்கையையே அஸ்தமனம் ஆக்கிவிடும் என்பதை புரிந்துகொண்டார். இந்த நிலையில்தான் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. செயல்படுவதையே ஓ.பி.எஸ். விரும்புகிறார்.

ஆனால், தற்போதைக்கு சசிகலாவுக்கு ஆதரவாக பேசினாலோ, சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று பேசினாலோ ஓ.பி.எஸ்.ஸுக்கு பெரிய சிக்கல் ஏற்படும். எனவே, தனது தம்பி ஓ.ராஜா மூலம், ‘கொஞ்சம் பொறுத்திருக்கச் சொல்’, அ.தி.மு.க.வில் நடக்கும் பஞ்சாயத்தை சுமூகமாக ‘மேலிடத்தின்’ உதவியுடன் முடிவுத்துவிட்டு, அதன் பிறகு சசிகலா சப்ஜெக்டை எடுப்போம் என்று கூறியிருப்பதாக கூறப்படுகிறது. (இதனால் அ.ம.மு.க.வினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்!)

சமீபத்தில் கூட தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் சசிகலா பற்றி கேள்வி கேட்டபோது, ‘அ.தி.மு.க.வில் அம்மா பலரை நீக்கியிருக்கிறார்… பிறகு சேர்த்திருக்கிறார்… இது சகஜம்தானே..?’ என ஓ.பி.எஸ். பதிலளித்திருக்கிறார். இதிலிருந்தே விஷயம் புரியவில்லையா..? எனவே, அ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை முடிந்த பிறகு சசிகலா ஓ.பி.எஸ். ஆதரவுடன் களத்தில் இறங்குவார்’’ என்றனர்!

அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகாரச் சண்டை, தி.மு.க.விற்கு சாதகமாக அமைகிறது என்பதை நினைத்து உருகுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal