அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி அறிவித்திருப்பது எடப்பாடி தரப்பை மகிழ்ச்சியிலும், ஓ.பி.எஸ். தரப்பை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது!

அதிமுக பொதுக் குழு கூட்டம் இன்று நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இதை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் முடிவு செய்தனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து முதலில் விவாதம் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் போர்க் கொடி உயர்த்தப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

ஏற்கெனவே ஓபிஎஸ்ஸை வெளியே போக சொல்லுங்கள் என தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். அவரது வாகனத்தை உள்ளே விடாததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. இதையடுத்து அவர் வேறுஒரு அறையில் அமர்ந்திருந்தார்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி விழா மேடைக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விழா மேடைக்கு ஓபிஎஸ்ஸும் வந்தார். அவர் வணக்கம் செலுத்திய போது அங்கிருந்த பொதுக் குழு உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். 10 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

இதையடுத்து இருவரும் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ்ஸுக்கு முன்பு எடப்பாடியே மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து பொதுக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிந்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பேசாதே போ போ என ஆவேச குரல் கொடுத்தனர். இதையடுத்து ஓபிஎஸ் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்தார். அங்கு ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தீர்மானத்தை ஏற்க அழைக்கப்பட்டார். அப்போது அவர் இந்த பொதுக் குழு கூட்டத்தில் உள்ள அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது நிராகரிக்கிறது என ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி பேச வந்தார். அவர் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்களை வேறு ஒருநாளில் பொதுக் குழுவை கூட்டி நிறைவேற்றப்படும் என்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எடப்பாடி தரப்பின் அதிரடி வியூகத்தால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal