விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல், எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்து தேர்தல்கள் மற்ற மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவை சேர்ந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் காலமானார். இந்த சம்பவம் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விக்கிரவாண்டி தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை வரும் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 20 ஆம் தேதி ஐந்தாம் கட்டம், மே 25 ஆம் தேதி ஆறாவது கட்டம் மற்றும் ஜூன் 1, 2024 இல் ஏழாவது கட்டம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 6 வது மற்றும் 7ஆம் தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal