கடந்த 6-ந்தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்குரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் பறக்கும்படை அதிகாரிகள் ரெயிலில் சோதனை நடத்தினர்.

அப்போது பணத்துடன் 3 பேர் சிக்கினர். அவர்கள் கொண்டு செல்ல முயன்ற 4 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது பிடிப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருநெல்வேலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

அதேவேளையில் நயினார் நாகேந்திரன், அது தனது பணம் இல்லை எனக் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். கால அவகாசம் கேட்டு, அவர் நேரில் ஆஜராகவில்லை. 2-வது முறையாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பாரம் போலீசார் நாளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உள்ளனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal