தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க. தங்களது கட்சி சார்பில் 3 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு சீட் ஒதுக்கியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் இரண்டு பேரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவுதான் அ.தி.மு.க.வில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து சதன் பிரபாகர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘பணத்தைப் பெற்றுக்கொண்டு கழக பதவிகளை விற்பவர்கள்… தேர்தல் சமயத்தில் கழகம் கொடுத்த பணத்தை கையாடல் செய்தவர்கள்… ஆளும் கட்சியாக இருந்தாரும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பணம் சம்பாதிப்பவர்கள்… அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரண்பாடாக நடந்து கொள்பவர்கள்… இப்படி தவறு செய்கிற நபர்களை விட்டுவிட்டு, கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என்பதுதான் சாரதாரண தொண்டனின் கருத்தாக இருக்கிறது’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

காசை பெற்றுக்கொண்டு கழகப் பதவிகளை யார் விற்கிறார்கள்…. சதன் பிரபாகர் மனம் வெறுத்து இப்படியொரு பதிவை போட்டதற்கு என்ன காரணம் என்று ராமநாமபுரம் மாவட்டத்தில் உள்ள ர.ர.க்களிடம் பேசினோம்.

‘‘ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆரம்பத்தில் கட்சி வேலையை சிறப்பாக பணியாற்றி வந்ததால் அவரது மனைவி கீர்த்திகாவிற்கு பரமக்குடி நகராட்சி சேர்மன் பதவி ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுகவிலும் கீர்த்திகாவுக்கு மாநில மகளிரணி பொறுப்பும் வழங்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட கீர்த்திகாவிற்கு வாய்ப்பு கொடுத்த போதிலும் தோல்வியுற்றார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் முனியசாமி இடம் தலைமை விசாரணை நடத்தினாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உறவு முறை என்பதால் மாவட்ட செயலாளர் பதவி பறி போகாமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து, கட்சி பதவிக்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுத்தது, கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவினருக்கு காண்ட்ராக்ட் கொடுத்த விவகாரம் என ஆதாரப்பூர்வமாக தலைமைக்கு புகார் அனுப்பி வைத்தும் ஓபிஎஸ் கடைக்கண் பார்வையால் தப்பித்து வந்தார் முனியசாமி.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது விழாக்களில் பங்கேற்க மதுரை மற்றும் ராமநாதபுரம் வந்த போது முனியசாமியை மாற்ற சொல்லி கோஷங்களை எழுப்பி மாவட்டத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர். கடுங்கோபத்தில் எடப்பாடி பழனிசாமி சென்றதை அறிந்த முனியசாமி பதறியடித்து கொண்டு கோவை சென்று எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கூல் செய்ததால் அப்போதும் தப்பித்து விட்டார்.இராமநாதபுரம் மாவட்டத்தில் தனக்கு எதிராக யாரும் இருக்க கூடாது என்பதற்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டனையும் ஓரங்கட்டி அவருக்கு மீண்டும் சீட் கிடைக்க விடாமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனது மனைவி கீர்த்திகா போட்டியிட்ட முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்திய முனியசாமி மற்ற மூன்று தொகுதிகளில் கவனம் செலுத்தாதல் மொத்த தொகுதியிலும் அதிமுக தோல்வியை தழுவியது.

அதிமுக தலைமை தேர்தலுக்கு கொடுத்த பணம் உரியவர்களுக்கு சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. தொடர்ந்து அதிமுக வசம் இருந்து வந்த தொகுதியான பரமக்குடியில் சதன் பிரபாகரன் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக சதன் பிரபாகர் மனம் வெறுத்து இப்பதிவை பதிவிட்டு இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். லோக்கல் கட்சியினர் எதிர்ப்பை மீறி கீர்த்திகா ராஜ்யசபா எம்பி சீட் வாங்கி விட்டால் அது ஓபிஎஸ் ஆதரவு என்பது வெட்ட வெளிச்சமாகும்’’ என்றனர்.

இந்தப் பதிவுதான் தென்மாவட்ட அ.தி.மு.க.வில் அனலைக் கிளப்பியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal