ராஜ்யசபா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் கடும் போட்டி நிலவுவதால் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அல்லது நாளை வேட்பாளர் பெயர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஏற்கனவே திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதிமுக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை கழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க தீவிரமாக ஆலோசிக்ப்பட்டது. இதில் எந்தவித முடிவும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 2 இடங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டு வருகின்றனர். எனவே யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதில் தொடர் குழப்பம் ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வழங்கப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அவர் ராஜ்ய சபா எம்.பி. ஆவதை விரும்பவில்லையாம். இந்த நிலையில்தான் இன்று மாலைக்கு யாருக்கு சீட் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள்.

இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நீடிக்கும் குழப்பம் குறித்து ர.ர.க்களிடம் பேசினோம். ‘‘சார், அம்மா (ஜெயலலிதா) இருந்திருந்தால், முதன் முதலாக வேட்பாளரை அறிவித்திருப்பதார். அந்த வேட்பாளரின் பெயரைப் பார்த்தபிறகுதான், ‘ஓ… அவர் இத்தனை ஆண்டுகள் கட்சியில் இருந்திருக்கிறாரா?’ என்பது பற்றி அவரது முழு விபரங்கள் தெரியவரும்.

ஆனால், தற்போது ஓ-.பி.எஸ், இ.பி.எஸ். இரட்டைத் தலைமையில் வேட்பாளர் தேர்வு செய்வதில் கடும் குழப்பம் நீடிக்கிறது. ‘எனது ஆதரவாளர் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும்’ என வற்புறுத்தி வருகிறார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம் என்பதால், ‘இருவரையும் நாங்கள்தான் முடிவு செய்வோம்’ என்கிறார் இ.பி.எஸ்., இப்படி இரட்டைத் தலைமையால் அ.தி.மு.க. படுபாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது’ என்றார் வேதனையுடன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal