தமிழகத்தைப் பொறுத்தளவிற்கு ஆளுங்கட்சியானாலும் சரி, எதிர்க்கட்சியானாலும் சரி, தேர்தல்களை எதிர்கொள்வதற்கு சமீபகாலமாக ‘தேர்தல் வியூக’ பொறுப்பாளர்களை நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து வருவதும் வழக்கம்தான்.

இந்த நிலையில்தான் வரும் 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை புது வியூகம் அமைத்துள்ளார்.அதாவது, குஜராத் மாடலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் வாக்காளர்கள் பட்டியலை முன்னிலைப்படுத்தி ஒவ்வொரு பக்கத்திற்கும், ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். மேலும், ‘இல்லந்தோறும் மோடி; உள்ளந்தோறும் தாமரை’ என்ற கோஷத்தை முன்வைத்து, தேர்தல் பணிகளையும் பா.ஜ.க, வினர் துவங்க உள்ளனர்.

தமிழகத்தை எட்டு பெருங்கோட்டங்களாக (மண்டலமாக) பிரித்து ஒரு பெருங்கோட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் நியமித்து, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை நூறு சதவீதம் நிறைவேற்றப்பட உள்ளனர்.

கொங்கு மண்டலத்திற்கு மாநில பொதுச்செயலர் கோவை ஏ.பி.முருகானந்தம் பெருங்கோட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானியுடன் அரசியல் பயணித்து, தேசிய அரசியலில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்ட வியூகங்களை வகுத்துள்ள அனுபவம் உள்ளவர். திராவிட மண்ணுக்கு மையப்புள்ளியாக கருதப்படும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க, வெற்றிக்கு பின்புலமாக இருந்தவர். இவர் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறார்.

அதேபோல், கன்னியாகுமரி பெருங்கோட்டத்திற்கு பொதுச்செயலர் பாலகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தலித் மக்களின் உரிமைக்கு குரல்கொடுத்து வருகிறார். சேலம் பெருங்கோட்டத்திற்கு துணைத்லைவர் கே.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விவசாயிகளின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர்.

விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு வினோஜ் செல்வம், மதுரை பெருங்கோட்டத்திற்கு கதலி நரசிங்க பெருமாள், திருச்சி பெருங்கோட்டத்திற்கு பொதுச்செயலர் கருப்பு முகானந்தம், வேலூர் பெருங்கோட்டத்திற்கு பொதுச் செயலர் கார்த்திகாயினி, சென்னை பெருங்கோட்டத்திற்கு துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 26ம்தேதி, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ, முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் சென்னை பயணத்திற்கு பின், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் போராட்ட வியூங்களை வகுத்து, பொறுப்பாளர்களை ஆக் ஷன் டீமாக பெருங்கோட்டம் வாரியாக களம் இறக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. & அ.தி.மு.க.விற்கு மிகப்பெரும் சவாலாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal