‘எதையும் சமாளிக்கக்கூடிய வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி’ என்றால் அது மிகையாகாது. அதற்கு உதாரணம்தான். கடந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்… இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று கணக்குப் போட்டனர். ஆனால், கணக்குகள் கானல் நீராகிவிட்டது.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்ட கணக்குகளை எல்லாம் சுக்குநூறாக நொறுக்கிவிட்டு, அ.தி.மு.க. ஆட்சியை ஐந்தாண்டுகள் முழுமையாக பூர்த்தியடைய வைத்தது எடப்பாடியின் சாமர்த்தியம் என்றே சொல்லலாம். ஏனென்றால், ஒரு பக்கம் சசிகலா, மறுபக்கம் ஓ.பி.எஸ். என உட்கட்சியிலும், எதிர்பக்கம் தி.மு.க., அதே சமயம் பி.ஜே.பி. மேலிடமும் ஆரம்பத்தில் கடுமையான நெருக்கடிகள் கொடுத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனையையும் சமாளித்தவர் எடப்பாடியார்.

தற்போது தி.மு.க. ஓராண்டு சாதனைகளை மாவட்டந்தோறும் கூட்டம் போட்டு விளக்கி வருகிறது. இந்த நிலையில்தான் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் விதமாக எடப்பாடியார் காய்நகர்த்தி வருகிறாராம். இது பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், சசிகலாவின் அரசியலை சமாளித்து கொண்டே, திமுகவையும் டேமேஜ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. பொதுச்செயலாளர் குறித்த கோர்ட் தீர்ப்பு வந்தபிறகு, மேல்முறையீடு செய்ய போவதாக சசிகலா அறிவிப்பார் என்று எடப்பாடி தரப்பு நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை.

அதனால்தான், அதற்கு செக் வைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடியாருக்கு உடனடியாக எழுந்துள்ளது. எனவே, பொதுச்செயலாளர் பதவி விஷயத்தில் முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தவிர்த்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. எனினும், கட்சியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காகத்தான், 3விதமான பிளானை கையில் எடுத்துள்ளார். முதலாவதாக, கிராமம் கிராமமாக சென்று அதிமுகவை பலப்படுத்தும் முயற்சியில் இறங்க இருக்கிறார். ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

இரண்டாவது, பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வர உள்ள நிலையில், அவரை நேரடியாகவேசந்தித்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளாராம். அப்போது, திமுக பற்றின புகார் லிஸ்ட் ஒன்றையும் பிரதமரிடம் தருவதற்காக, அதற்கான தயாரிப்பு பணியிலும் இறங்கிவிட்டாராம். கடந்த கால ஆட்சியைப் போலவே சினிமாத்துறையிலும், ரியல் எஸ்டேட் துறையிலும் தற்போது தி.மு.க.வின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இது பற்றி சில ஆதாரங்களுடன் குறிப்புகளை எடுத்து வைத்திருக்கிறாராம் எடப்பாடியார்.

மோடி மூலம் திமுகவுக்கு செக் வைப்பது ஒரு வகை என்றால், திமுகவை நேரடியாகவே டேமேஜ் செய்வது இன்னொரு வகையாம். அதாவது, திமுக ஆட்சி ஓராண்டு நடந்து முடிந்த நிலையில், அதை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள் இல்லையா. தமிழகம் முழுக்க திமுக தலைவர்கள் மேடை போட்டு, ஆட்சியின் சாதனைகளை விவரித்து வரும் நிலையில், அதை நாடு முழுவதும், மாநில மொழிகளில் விளம்பரப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

ஆனால், தி.மு.க. கொண்டாடும் வகையில் பெரிய சாதனை எதையும் புரிந்துவிட வில்லை. பெண்களுக்கு இலவச பேருந்தை அறிவித்துவிட்டு, அந்த பேருந்துகளில் இயக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்துத்துறை குறைத்துவிட்டது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

மூன்றாவதாக, ‘திமுக அரசின் 365 நாள் வேதனை’ என்ற தலைப்பில் பத்திரிகை விளம்பரங்கள் மூலமாக, திமுகவை விமர்சிக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு, ரவுடிகளின் ஆதிக்கம், மின் தட்டுப்பாடு, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என அனைத்தையும் புட்டு புட்டு வைக்க போகிறார்களாம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரின் வியூகத்தை தி.மு.க. எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal