டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுவான காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை கூடுகிறது. 6 குழுக்களின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 13ந் தேதி முதல் ராஜஸ்தானில் சிந்தனை கூட்டம் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியை அடுத்தடுத்த தோல்வியில் இருந்து மீட்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் போர்க்கொடியை உயர்த்தினார்கள். இதையடுத்து கட்சியின் புதிய தலைவரை வருகிற செப்டம்பர் மாதம் தேர்வு செய்ய இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக கட்சியை முழுமையாக சீரமைக்கும் வகையில் புதிய வியூகங்கள் வகுக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அரசியல் குழு, சல்மான்குர்ஷித் தலைமையில் சமூக நீதி குழு, ப.சிதம்பரம் தலைமையில் பொருளாதார குழு, முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைப்பு குழு, புபீந்தர்சிங் தலைமையில் விவசாய குழு, அமரீந்தர் சிங் தலைமையில் இளைஞர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தலா 9 பேர் இடம் பெற்றனர்.

இவர்கள் கடந்த சில வாரங்களாக தீவிர ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர். அந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றன. அவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 13ந் தேதி முதல் ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் சிந்தனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுவான காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது.

இதில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் புதிய வியூகம் குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal