தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் தான் ‘தலைமைப் பதவி’க்கு அவ்வப்போது தகராறு நடக்கும். தற்போதைக்கு எடப்பாடியார் இருந்தாலும், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் என காய் நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் ‘தி.மு.க.வின் எதிர்கலம் கனிமொழி!’ என கொளுத்திருப் போட்டிருக்கிறார் திருச்சி சிவா எம்.பி.,யின் மகன்!

‘‘திமுக எம்.பி. திருச்சி சிவா ஒரு மோசமானவர் என்றும் கொள்கைவாதியை போல் வெளியே வேஷம் போட்டு திரிகிறார் எனவும் அவரது சொந்த மகன் சூர்யாவே பகீரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பதுதான் தி.மு.க. தலைமையை கொஞ்சம் ஆட்டிப் பார்த்திருக்கிறது!

நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கான எந்த அங்கீகாரமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால், கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். மேலும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் என்னையும், எனது மனைவி மற்றும் குழந்தைகளையும் எனது தந்தை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு திமுகவில் எந்த பதவியும் கிடைக்காமல் தடுப்பதில் எனது தந்தையும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியும்கூட, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

எனது அப்பாவும் நானும் பேசி 10 வருடங்கள் ஆகின்றன. அவர் ஒரு மோசமானவர். வெளியே கொள்கைவாதியை போல் தன்னை காட்டிக்கொள்வார், ஆனால் கேரக்டர் சரியில்லை. எனது அம்மா மறைவுக்கு பிறகு அவர் செல்லும் பாதை சரியில்லை. அவ்வளவு தான் சொல்ல முடியும். கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்துகொண்டேன் என்பதற்காக எனக்கு சொத்துக்களை கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டுகிறார். எனது மகன் பிறந்தநாள் விழாவை ராஜாத்தி அம்மாள், கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எனக்கு தெரிந்த தலைவர்களை அழைத்து நடத்தினேன். அதில் அழையா விருந்தாளியாக ஊடகங்களுக்காக எனது தந்தை வந்து தலையை காட்டிவிட்டு வந்தார். அப்பனும் மகனும் எப்பவேண்டாலும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று கூறி அமைச்சர் நேரு அண்ணன் கூட என்னிடம் பேசுவதை குறைத்தார். இப்படி எனது அப்பாவால் எனக்கு பின்னடைவு தான் கட்சியில் ஏற்பட்டதே தவிர ஒரு முன்னேற்றமும் இல்லை.

திமுகவின் எதிர்காலம் கனிமொழி தான் என்றும் இப்போது தாம் பாஜகவில் இருந்தாலும் கூட கனிமொழி மீதான மதிப்பும் மரியாதையும் குறையாது எனக் கூறியிருக்கிறார். தி.மு.க.வின் எதிர்காலம் என்று வரும்போது கனிமொழிக்கு நல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது’’ என்று கொளுத்திப் போட்டிருப்பதுதான், தி.மு.க.வில் தற்போது புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal